பிடித்த செய்தி


மதுரை மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வழக்கமாய் காலை 9.30 மணிக்கு துவங்கும், ஆனால் 8 மணிக்கே ஒருவரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
அவர்தான் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட்(47).
மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கொண்டுவந்த பாடபுத்தக குறிப்புகள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை கொண்டு போய் தனது மேஜையில் வைத்துவிட்டு வெளியே வருகிறார்.
அடுத்த ஒரு மணி நேரம் அதாவது பள்ளி திறப்பதற்கு (காலை 9.30) அரை மணி நேரம் முன்புவரை, அவர் பம்பரமாக சுழன்று செய்யும் வேலைகள்தான் அவர் பற்றி இந்த கட்டுரை எழுத தூண்டுகோள்.
ஆமாம், கையில் ஒரு விளக்குமாறும், வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை சுத்தம் செய்கிறார், பின்னர் வகுப்பறைகளில் குப்பை கூளங்கள் இல்லாமல் பெருக்கி எடுக்கிறார், பள்ளி வளாகத்தில் பேப்பர் எதுவும் இல்லாமல் சுத்தம் செய்கிறார். இவற்றை எல்லாம் செய்து முடித்ததும், பள்ளியின் கழிப்பறை முதல் வகுப்பறை வரை பளீச்சென சுத்தமாக இருக்கிறது.
கை,கால் முகம் கழுவி தன்னை தலைமையாசிரியர் இருக்கையில் அமர்வதற்கும் பள்ளியின் இதர ஆசிரியர்கள், மாணவர்கள் வருவதற்கும் நேரம் சரியாக இருக்கிறது.
சுத்தம் சிறிதுமின்றி பல அரசு பள்ளிகள் இருக்கும் போது, இவரது பள்ளி மட்டும் எப்படி இவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சர்யம், இதற்கு காரணம் தலைமை ஆசிரியரான கில்பர்ட்தான் என்பதே பலருக்கும் தெரியாது, அது தெரியவும் வேண்டாம் என்கிறார் கில்பர்ட்.
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவரான கில்பர்ட், என்ன படிப்பது, எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது என்பது தெரியாமல் இருந்தபோது முன்பின் தெரியாத பாதர் லூர்துசாமி என்பவர் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் இவருக்கு செய்திட்ட உதவியே இவரை ஆசிரியராக்கியது.
எப்போது ஆசிரியரானாரோ அப்போதே கில்பர்ட் ஒரு முடிவு செய்தார்.
முன்பின் தெரியாத தனக்கு எப்படி ஒருவர் உதவினாரோ, அதே போல நாமும் பலரது முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கவேண்டும் என்று. ஆசிரியராக இருந்து கொண்டு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்வது என்றும் முடிவு செய்தார்.
தனது சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி பொருளாதாரம் காரணமாக பள்ளியில் படிக்க முடியாமல் நின்ற குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து அவர்களை செலவு செய்து படிக்க வைக்கிறார்.
பள்ளி வளாகத்தில் மிட்டாய் விற்கும் மூதாட்டியின் குழந்தைகள் உள்பட்ட வறுமையான குடும்பத்து குழந்தைகளின் மொத்த படிப்பு செலவை ஏற்றுக் கொண்டு படிக்க வைக்கிறார்.
இவரைப் பொறுத்தவரை எந்த குழந்தையுமே படிக்காமல் இருக்கக்கூடாது. தொடர்ந்து மூன்று நாள் ஒரு மாணவன் வகுப்பிற்கு வராவிட்டால், என்னாச்சோ என்று அந்த மாணவனது வீட்டிற்கு தேடிப்போய் பார்த்து, சம்பந்தபட்ட மாணவன் பிரச்னையை தீர்த்து , வகுப்பிற்கு தொடர்ந்து வரும்படி பார்த்துக் கொள்வார்.
எப்போதுமே வீட்டில் இருந்து தனக்கு போக மேலும் இரண்டு பேருக்கு சாப்பாடு கொண்டு வருவார், அவசரத்தில் சாப்பாடு கொண்டு வராமல் வந்துவிடும் பிள்ளைகளுக்கு கொண்டுவந்த கூடுதல் சாப்பாடை கொடுத்துவிடுவார். தன்னிடம் கூடுதலாக ஒரு நூறு ரூபாய் இருந்தால் கூட போதும் உடனே அந்த நூறு ரூபாய்க்கு மிக்சர் போன்ற நொறுக்குத்தீனி வாங்கிவரச் செய்து , குழந்தைகளிடம் வழங்கி மகிழ்ச்சியடைவார். இவரது வீட்டிற்கு உறவினர்கள் வாங்கிவரும் இனிப்பு, காரத்தைக் கூட பள்ளிக்கு கொண்டுவந்து பகிர்ந்து கொள்வார். விசேஷ நாட்களில் வீட்டில் செய்யும் விசேஷ உணவுகளும் பள்ளி குழந்தைகளுக்குதான்.
வெறும் உணவு மட்டுமின்றி அவ்வப்போது ஜாமெண்ட்ரி பாக்ஸ், பேனா, ஸ்கூல் பேக் போன்றவைகளையும் வாங்கி கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்துவார். மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளார்.
இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்த போது, இவரே வலிய போய் தனக்கு ஏதாவது ஒரு சின்ன கிராமத்தில் வேலை போட்டு கொடுங்கள் என்று கேட்டு அதன்படி கம்மாளபட்டி என்ற கிராம பள்ளிக்குதான் வேலை வாங்கிச் சென்றார். அதே போல பணிமாறுதல் வரும்போதும் ஏதாவது கிராமத்தில் உள்ள பள்ளிக்கே மாற்றிக்கொடுங்கள் என்று கேட்டு வாங்கிச் செல்வார். அந்த வகையில் இப்போது சோழவந்தானை அடுத்துள்ள அய்யப்பநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
பள்ளிக்கூடத்திற்கு வந்துட்டா அவங்கெல்லாம் நம்ம பிள்ளைங்க, நம்ம பிள்ளைங்க இருக்கிற இந்த இடத்தை கோயில் மாதிரி வைச்சுக்கணும்னு சக ஆசிரியர்களிடம் சொல்லி அவர்களது ஒத்துழைப்போடு பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்.
எல்லாம் சரி கழிப்பறையை சுத்தம் செய்வது என்பதை ஒரு சிலர் கேலியாக நினைப்பார்களே என்றதும், "யார் கேலியாக நினைத்தால் எனக்கென்ன, என் மனசு சொல்கிறது, நான் செய்வது சரிதான் என்று. அது போதும் பிறகு ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்னுடைய பள்ளி என்று இல்லை எந்த அரசு ஆரம்பபள்ளியிலும் கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு என்று தனி சுகாதார பணியாளர் கிடையாது, ஒன்று மாணவர்கள் சுத்தம் செய்யவேண்டும், அல்லது ஆசிரியர்கள் சுத்தம் செய்யவேண்டும், பெரும்பாலான பள்ளியில் மாணவர்களை வைத்து சுத்தம் செய்வார்கள் எனக்கு அதில் உடன்பாடு இல்லை, சக ஆசிரியர்களை, மற்ற வேலைகள் சொல்லலாம் கழிப்பறை சுத்தம் செய்யுங்கள் என்று சொல்லமுடியாது ஆகவே நானே கழிப்பறை சுத்தம் செய்யும் பணியில் இறங்கிவிட்டேன், எனக்கு இதில் எந்த தயக்கமும் கிடையாது. மாறாக நிறைய மனத் திருப்திதான் உண்டாகிறது.' என்கிறார் சாந்தமாக.
பள்ளிக்குழந்தைகள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே ஏதாவது விசேஷ காரணம் உண்டா? என்றபோது ,"எனக்கு ஒரு முறை உடல் நிலை மோசமானபோது பள்ளி குழந்தைகள்தான் கண்ணீர்விட்டு அழுது பிரார்த்தனை செய்தனர், அவர்களது பிரார்த்தனையால்தான் நான் இன்று உயிருடன் இருப்பதாக எண்ணுகிறேன். இப்படி உயிர் கொடுத்த குழந்தைகளுக்கு நான் ஒன்றும் அதிகமாக செய்யவில்லை, என் கடமையையையும், கூடுதலாக என் நன்றிக்கடனையும் செலுத்துகிறேன்'' அவ்வளவுதான் என்ற தலைமை ஆசிரியர் கில்பர்ட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவரும்கூட, எவ்வளவோ வற்புறுத்தி கேட்டு கொண்டும் கூட கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற போட்டோ எடுக்க ஒத்துக் கொள்ளவில்லை, மேலும் இது எனக்கான மனதிருப்திக்காக செய்கிறேன், ஆகவே பிறர் வாழ்த்த வேண்டும், பாராட்ட வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பது கிடையாது, எப்போதுமே மற்றவர்களை முன்விட்டு கடைசி ஆளாக நிற்பவன் நான் ஆகவே எனது போன் நம்பரும் வேண்டாம் என்று கூறிவிட்டார். உங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையை உங்களுக்கு முன்னால் போக விடுங்கள் அது போதும் உலகம் அன்பு மயமாகும் என்பதை தனது வேண்டுகோளாக குறிப்பிடும்படி மெத்த பணிவுடன் கூறிவிடைகொடுத்தார்.

கருத்துகள்

  1. ovvovoru palli aasiriarum ithagaya mana pakkuvathil irundhal , itchamudhayame semmayaga irukkum.
    ithagaya aasiriyaral mattumey, naattill ulla anaivaraiyum kalvi petravargalaaga maatra mudium.
    ivarai pola pala aasiriyargal uruvaaga naan aasaipadugirean.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்